

சென்னை,
அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிறந்தநாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும்போதும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தித்துறை இயக்குனர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் எழிலழகன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, விழாவை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்.
முன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரையில் கடந்த ஆண்டு (2017) ஜூன் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டு, 31-வது மாவட்டமாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.