

சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகரம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மண்டலங்களிலும் இரவு நேர ரோந்து பணிக்காக 125 வாகனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் கேங்மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின் விநியோகத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சரிசெய்யும் வகையில் இந்தக் குழுக்கள் செயல்படும்.
சில நாட்களாக சென்னை மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோக கோளாறுகள் மற்றும் மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வின் போது, சில இடங்களில் பழுதடைந்த மின் கம்பிகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மின் தடை ஏற்பட்டதும், சில இடங்களில் சமூக விரோதிகள் வேண்டுமென்றே மின் பியூஸ்களை அகற்றிய சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரம்பூர், 51-வது வார்டு, விருகம்பாக்கம், கொடுங்கையூர், மடிப்பாக்கம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரே மாதிரியான மின் விநியோக கோளாறுகள் மற்றும் பியூஸ் சேதப்படுத்தும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் பதிவாகியுள்ளன. இந்த பகுதிகளில் ஏற்படும் நிகழ்வுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அதன் காரணங்களை முழுமையாக ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் ரோந்து குழுக்கள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் 24 மணி நேர ரோந்து, கூடுதல் பணியாளர்கள், அவசரகால பராமரிப்பு உபகரணங்கள் மற்றும் விரைவான மின் பழுதுநீக்கக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு குழுவிற்கும் தேவையான மின் பியூஸ்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால பராமரிப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரிய வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் விரைவாக செயல்பட ஆட்டோக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குநர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் தலைமையில் 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் நேரடியாக ஆய்வு செய்து, இரவு முழுவதும் ரோந்து பணிகளை கண்காணித்து வருகின்றன.
மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு புகாருக்கும் விரைவான தீர்வு வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் மனிதவளம் மற்றும் வாகன வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் தேவையான கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்தல், கூடுதல் வாகனங்களை வாடகைக்கு எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த பத்து நாட்களாக சில பகுதிகளில் ஒரே மாதிரியான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதால், அவற்றின் பின்னணி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவடி பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட பியூஸ் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் இரு நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அனைத்து முக்கிய பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் மின் உற்பத்தி அல்லது மின் தட்டுப்பாடு தொடர்பான எந்த பிரச்சினையும் இல்லை. அண்மையில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்த காரணத்தால் உச்சநேரங்களில் சில இடங்களில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், மாநிலத்தில் போதுமான மின் உற்பத்தி இருப்பு உள்ளது; மின்விநியோக கோளாறுகள் பெரும்பாலும் விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளே தவிர மின் பற்றாக்குறையால் ஏற்பட்டவை அல்ல.
மேலும், ஒவ்வொரு நாளும் மாநிலம் முழுவதும் மற்றும் சென்னை மாநகரில் எங்கு, எப்போது, எவ்வளவு நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது, அதற்கான காரணம் என்ன, எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்பட்டது என்பன தொடர்பான விவரங்கள் மின்னகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டு வருகின்றன.
தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் வாரியத்தின் முதன்மை நோக்கமாகும். அதற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகால நடவடிக்கைகளும் முழுமையான தயார்நிலையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.