

சென்னை,
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான திரைக்கதை, வசனம் மற்றும் நகைச்சுவை மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்து புகழ்பெற்றவர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் பாக்யராஜ். அதன் பிறகு 'சுவரில்லாத சித்திரங்கள்', 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு' போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கி, முன்னணி இயக்குநராக உயர்ந்தார். சமீபத்தில், இவர் சினிமாவில் தனது 50 ஆண்டு கால சாதனையை நிறைவு செய்து, புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
பாக்யராஜின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.