கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

கவிஞர் புவியரசு மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
Published on
Updated on

சென்னை,

கவிஞர் புவியரசு

சாகித்ய அகாடமி விருதை இரு முறை பெற்றவரும், ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு (96) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது. கவிஞர் புவியரசு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு.

‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அரசு மரியாதை

கவிஞர் புவியரசின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் கவிஞர் புவியரசின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com