

சென்னை,
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, வனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து முதல் முழுமையான மாநில அளவிலான வேட்டை பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு வேட்டை பறவைகளின் முக்கிய வாழிடமாகத் திகழ்கிறது. இம்மாநிலத்தில் Accipitriformes, Falconiformes மற்றும் Strigiformes வரிசைகளைச் சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட வேட்டை பறவை இனங்கள் காணப்படுகின்றன. வேட்டை பறவைகள் (Raptors) உயிரியல் அமைப்பில் முக்கிய பங்காற்றும் முதன்மை இனங்களாக (Keystone Species) விளங்குவதுடன், பல்வேறு சூழலியல் சேவைகளையும் வழங்குகின்றன. மேலும், அவை சுற்றுச்சூழலின் நலனைக் குறிக்கும் உயிரியல் குறியீட்டு இனங்களாக (Bio-indicators) கருதப்படுகின்றன. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கடலோர ஈரநிலகள் வேட்டைபறவைகளுக்கான முக்கிய வாழிடங்களாக உள்ளன.
வேட்டை பறவைகளின் பாதுகாப்பை முன்னெடுக்கும் மாநில அளவிலான அமைப்பாக தமிழ்நாடு ராப்டர் ஆராய்ச்சி மையம் (Tamil Nadu Raptor Research Foundation – TNRRF) ஜூலை 2025-ல் நிறுவப்பட்டது. இந்த ஆராய்ச்சி மையம், சென்னை, வண்டலூரில் அமைந்துள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் (Advanced Institute for Wildlife Conservation – AIWC) வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. வேட்டை பறவைகளின் உயிரியல் மற்றும் சூழலியல் தொடர்பான முக்கியமான அறிவியல் தகவல்களை உருவாக்குவதிலும் இந்த ஆராய்ச்சி மையம் கவனம் செலுத்தி வருகிறது. தீவிர அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம், இந்த அறக்கட்டளை வேட்டை பறவைகளின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த முக்கிய அறிவை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
வேட்டை பறவை பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தி வரும் உலக வனவிலங்கு நிதியம் – இந்தியா (World Wide Fund for Nature–India) அமைப்பின் நிபுணர் குழு, தமிழ்நாட்டில் வேட்டை பறவை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் AIWC மற்றும் TNRRF குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் முதல் முழுமையான மாநில அளவிலான வேட்டை பறவை கணக்கெடுப்பு 2026-ம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் அனைத்து வனக் கோட்டங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 49 வனக் கோட்டங்களில் மொத்தம் 389 கணக்கெடுப்பு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இக்கணக்கெடுப்பில் 3,643 மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர். 7,959 கிலோமீட்டர் வாகன வழி ஆய்வு மற்றும் 2,115 கிலோமீட்டர் நடைபயண ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது மொத்தம் 5,712 வேட்டை பறவை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், Pandionidae, Accipitridae, Falconidae, Tytonidae மற்றும் Strigidae ஆகிய ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 51 வேட்டை பறவை இனங்கள் பதிவாகின.
வேட்டை பறவைகளின் உயிரியல் மற்றும் சூழலியல் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கும், அவற்றின் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான முக்கிய முயற்சியாக இக்கணக்கெடுப்பு கருதப்படுகிறது. இதனை அங்கீகரிக்கும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, வனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து முதல் முழுமையான மாநில அளவிலான வேட்டை பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.