

சென்னை,
சென்னையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்“ அனுசரிக்கப் படுவதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று (28.11.2026) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆணையர் எம். லக்ஷ்மி, அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலாளர் மதுமதி, முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 1500 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.