

சென்னை,
ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக இந்திய ராணுவம் சென்னை நங்கநல்லூர் சாலை - அதிகாரிகள் பயிற்சி அகாடமி ஓ.டி.ஏ. மெட்ரோ ரெயில் நிலையம் அருகே அதிநவீன 'கோல்டன் பாம்' விருந்தினர் விடுதியை இன்று திறந்துள்ளது.
ராணுவத்தின் தென் இந்திய பகுதி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி, இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாகவும், சிறந்த வசதிகளுடனும் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியை, தென்னிந்திய பகுதிக்கான ராணுவ தளபதி இன்று திறந்து வைத்தார். இது முப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய வசதியையும் உதவியையும் உறுதி செய்வதில் இந்திய இராணுவம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.