

சென்னை,
தமிழக அரசு மாநில திட்டக்குழுவை உடனடியாக அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 18.11.2026 அன்று திருச்சியில் செயற்குழு உறுப்பினர் ம. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அரசியல் விளக்க உரை ஆற்றினார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி துணை செயலாளர் எம்.ரவி, பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன், வை.செல்வராஜ் செயற்குழு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1. தமிழக அரசு மாநில திட்டக்குழுவை உடனடியாக அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்!
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, வேலைவாய்ப்பு உருவாக்கம், வேளாண்மை மற்றும் தொழில்துறையின் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளுதல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், புவிசார் மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி வேறுபாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொலைநோக்கு திட்டமிடலும் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியமாகின்றன.
இத்தகைய வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதிலும், அரசின் பல்வேறு திட்டங்களையும் முன்னுரிமைகளையும் ஒருங்கிணைப்பதிலும், அவற்றின் செயலாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்வதிலும் மாநில திட்டக்குழுவின் பங்கு இன்றியமையாதது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், மாநில திட்டக்குழு இதுவரை முழுமையாக அமைக்கப்படவில்லை. திட்ட குழுவை கலைத்துவிட்டு, தேவைக்கேற்ப தனித்தனி நிபுணர் குழுக்களை அமைக்க அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடல் என்பது அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை இலக்காக கொண்டதாக அமைய வேண்டும்.
வளர்ச்சியை பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடாமல், சமூக பாதுகாப்பு, வருமான பகிர்வு, கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், தொழிலாளர் நலன், இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையின் அடிப்படையில் திட்டமிடுவது அவசியம்.
இதற்கு பல்வேறு துறைகளில் அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட பொருளாதார அறிஞர்கள், சமூக அறிவியலாளர்கள், வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, மாநில திட்டக்குழுவின் தலைவராக உள்ள தமிழக முதல்-அமைச்சர், அதன் துணை தலைவரையும் உறுப்பினர்களையும் எவ்வித காலதாமதமுமின்றி நியமித்து, திட்டக்குழுவை முழுமையாக அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிர்வாக கட்டமைப்பு, ஆய்வு வசதிகள் மற்றும் நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணைய தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் நீதிபதி எம்.வி.முரளிதரனை விடுவித்திடுக!
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்று நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் தலைமையில் அமைந்த உயர்மட்ட குழு, அவரது பெயரை பரிந்துரைத்ததாக தகவல்கள் இருக்கின்றன.
நீதிபதி எம்.பி முரளிதரன், முன்பு மணிப்பூர் ஐகோர்ட்டில் பணிபுரிந்த போது, “மெய்தி இன மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் விளைவாக மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு, மூன்றாண்டுகள் கடந்தும் கூட, இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
நீதிபதி எம்.வி. முரளிதரன் அளித்த தீர்ப்பு “முற்றிலும் தவறானது, உண்மைகளுக்கு முரணானது, வெறுக்கத்தக்கது” என்று சுப்ரீம் கோர்ட்டு கடுமையான சொற்களில் கருத்துக்களை தெரிவித்தது.
மேலும் “தன்னை திருத்தி கொள்வதற்கு நீதிபதி முரளீதரனுக்கு அவகாசம் அளித்தோம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை” என்று அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் கூறியிருக்கிறார்.
பழங்குடியினர் இன வரலாறு, சமூக உறவுகள் சம்பந்தமான போதுமான புரிதலும், ஞானமும் இல்லாத ஒருவரை, அதே துறையின் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட மாநில ஆணையத்துக்கு தலைவராக நியமித்திருப்பது பொருத்தமற்றது. பேராபத்தானது.
கால நீடிப்பில் செயல்படும் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரை, செயலாக்கப்பட்டிருப்பது, ஏராளமான வினாக்களை எழுப்புகிறது. எனவே, எம்.வி.முரளீதரன் நியமனத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, உடனடியாக திரும்ப பெற வேண்டும். நாக்பூர் குரு பீடப் பின்னணி இல்லாத, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்குத் தன்னை அர்ப்பணித்து கொண்ட நீதிபதி ஒருவரை பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.
3. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளி போடாமல் உடனே நடத்துக!
தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊராட்சிகளின் காலம் 2025 ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் 9 மாவட்ட ஊராட்சிகளின் காலம் 2026 அக்டோபர் 17ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. 37 மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தாததை காரணம் காட்டி, மத்திய அரசு அவற்றுக்கான நிதி வழங்குவதை நிறுத்திவிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் வரும் 2027 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தொகுதி மறு வரையறை செய்வதற்காகவும், இட ஒதுக்கீட்டுகாகவும், 240 நாட்களுக்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு செய்திருக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, 2027 மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும். எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்.
4. பேராசிரியர் குரியன் ஜோசப் உயர்மட்ட குழுவை மீண்டும் செயல்படுத்துக.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் மாநில சுயாட்சியையும் பாதுகாப்பதற்கும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார பகிர்வில் நிலவும் முரண்பாடுகளை களைவதற்கும், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.
அந்த குழு தந்த பரிந்துரைகளில் முதல் தொகுதி, நாடு முழுவதும் அறிஞர்கள் அரசியல் துறையினரின் ஒரு மனதான பாராட்டுதல்களைப் பெற்றது. அந்தக் குழு வேறு எந்த ஒரு ஆணையத்துக்கும் போட்டியாகவோ, இணையானதாகவோ கருத முடியாது
மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், நிதி மற்றும் நிர்வாக அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இக்குழுவின் பணிகள் தொய்வின்றி தொடர வேண்டியது அவசியமாகும். எனவே, குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழுவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் செயல்படுத்தி, அதன் பரிந்துரைகளை விரைந்து பெற்று, அவற்றை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துக!
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி நீரை சார்ந்துள்ள தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேகதாது அணை திட்டத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட உரிய சட்டபூர்வ அனுமதிகள் இல்லாமல் கர்நாடக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது. இது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளையும் கூட்டாட்சி தத்துவத்தையும் பாதிக்கும் செயலாகும்.
எனவே, மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்டபூர்வ மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை பாதுகாக்கவும், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.