மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பதக்கங்கள் வழங்கினார்

காவல் மோப்ப நாய்கள் போட்டியில், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி முதலிடத்திற்கான கோப்பையை வென்றது.
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பதக்கங்கள் வழங்கினார்
டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால்
Published on: 

சென்னை,

மாநில காவல் பணித்திறனாய்வுப் போட்டிகளின் நிறைவு விழாவில், டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார். இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பணித்திறனாய்வு போட்டிகள்

2026ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயற்சி மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 12 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 3 சிறப்பு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 24 குழுக்கள் கலந்துகொண்டன.

20 போட்டிகள்

47 பெண் காவல் பணியாளர்கள் உட்பட மொத்தம் 368 காவல் பணியாளர்கள் மற்றும் 68 மோப்ப நாய்கள் அறிவியல்சார் புலனாய்வு, கணினி விழிப்புணர்வு, காவல் புகைப்படக்கலை, காவல் ஒளிப்பதிவு (வீடியோகிராபி), நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் மோப்ப நாய் போட்டி எனும் 6 தலைப்புகளின் கீழ் 20 போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது அற்பணிப்பையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாநகர காவல்

இப்போட்டிகளில் 21 தங்கம், 21 வெள்ளி மற்றும் 21 வெண்கலம் ஆக மொத்தம் 63 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகளை 52 போட்டியாளர்கள் வென்றனர். இந்த போட்டிகளில், திருப்பூர் மாநகர காவல், காவல்துறை புகைப்பட போட்டியில் முதல் இடத்திற்கான கோப்பையும், அறிவியல் சார் புலனாய்வு மற்றும் காவல் ஒளிப்பதிவு (வீடியோகிராபி) போட்டிகளில் இரண்டாம் இடத்திற்கான கோப்பைகளையும் பெற்று, மொத்தம் மூன்று கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சரகம்

வேலூர் சரகம், அறிவியல் சார் புலனாய்வு போட்டியில் முதல் இடத்திற்கான கோப்பையையும் சென்னை மாநகர காவல் மூன்றாம் இடத்திற்கான கோப்பையையும் வென்றது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் திருநெல்வேலி சரகம் ஆகிய அணிகள் கணினி விழிப்புணர்வுப் போட்டியில் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்கான கோப்பைகளை வென்றன.

வெடிகுண்டு தடுப்பு சோதனை போட்டியில் கோயம்புத்தூர் மாநகரம் முதல் இடத்திற்கான கோப்பையும், தமிழ்நாடு கமாண்டோ படை இரண்டாம் இடத்திற்கான கோப்பையும் பெற்றன. தாம்பரம் மாநகரம் காவல் ஒளிப்பதிவுப் (வீடியோகிராபி) போட்டியில் முதல் இடத்திற்கான கோப்பையும், விழுப்புரம் சரகம், காவல் புகைப்படப் போட்டியில் இரண்டாம் இடத்திற்கான கோப்பையும் பெற்றன.

மோப்ப நாய்கள் போட்டி

காவல் மோப்ப நாய்கள் போட்டியில், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி முதலிடத்திற்கான கோப்பையும், சென்னை மாநகரம் இரண்டாம் இடத்திற்கான கோப்பையும் பெற்றன. மேலும், மோப்ப நாய் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்கான சிறந்த மோப்ப நாய்க்கான விருது, சென்னை ரயில்வே காவல் பிரிவைச் சேர்ந்த காவலர் சந்தோஷ் குமாரால் கையாளப்பட்ட சோனியா என்ற சாரா என்ற மோப்ப நாய்க்கு வழங்கப்பட்டது.

தொழில்நுட்ப திறமை

2026 ஆம் ஆண்டு மாநில காவல் பணித்திறன் போட்டிகளில், தமிழ்நாடு காவல்துறையினரின் தங்களது தொழில்முறை. தொழில்நுட்ப திறமை மற்றும் பல்வேறு காவல் பணிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இன்று காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கத்தில், தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தார். காவல்துறை இயக்குநர், குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வு துறை, பூ. பால நாக தேவி, மற்றும் காவல்துறை தலைவர், தொழில்நுட்பம், ஜெ .லோகநாதன், மற்றும் கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், மருத்துவர் க. அ. செந்தில்வேலன், மற்றும் துணை இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் து. பெ. சுரேஷ்குமார் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X