

சென்னை,
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவருமான ஓமந்தூர் ராமாசாமிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக போற்றப்படுபவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். விடுதலைப் போராட்ட வீரராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஓமந்தூரார் காந்தியக் கொள்கையை துளியும் சிதையாமல் பின்பற்றுபவராக இருந்தார். அருட்திரு வள்ளலார் வழியில் வாழ்ந்தார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கையிலும் ஈடுபாடு கொண்டவராக வாழ்ந்தவர் ஓமந்தூரார். முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பிறகு மிகமிகச் சாதாரண விவசாயியைப் போல தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர் ஓமந்தூரார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான போராட்டங்களான உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நான்கு இயக்கத்திலும் பங்கெடுத்த மாபெரும் தியாக வீரர் ஓமந்தூரார்.
இந்திய நாடு விடுதலை அடையும்போது சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்த கம்பீரமான நடவடிக்கைக்கு ஒரு காரணமாகவும் திகழ்ந்தார்.
சமூகநீதியில் அழுத்தமான கொள்கை உறுதி கொண்ட முதல்-அமைச்சர் ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில் 21.11.1947 அன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது ஓமந்தூராரின் மாபெரும் சமூகநீதிச் சாதனை ஆகும். சமூக சீர்திருத்த எண்ணம் கொண்டவராக விளங்கிய ஓமந்தூரார் கோவில் நுழைவு அதிகாரமளிப்பு சட்டத்தை இயற்றினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்தார். இந்து சமய அறநிலையச் சட்டத்தை அமல்படுத்தி, கோவில் சொத்துகளையும், மடங்களையும் சட்டங்கள் மூலம் ஒழுங்குபடுத்தினார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார்.
அவரது சிறப்பு வாய்ந்த முன்னோடி நடவடிக்கைகளை அன்றைய பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அவரது முதல்-அமைச்சர் பதவிக்கே நெருக்கடி கொடுத்தார்கள். இதனைக் கண்டித்து தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் எழுதினார்கள். 'காந்தி ராமசாமியும், பெரியார் ராமசாமியும்' என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா, 'திராவிட நாடு' இதழில் எழுதிய தலையங்கம், அக்காலத்தில் தடை செய்யப்பட்டது. ஓமந்தூராரை, 'காந்தி ராமசாமி' என்ற அடைமொழியுடன் அழைத்தார் பேரறிஞர் அண்ணா.
இத்தகைய மாசற்ற மனிதருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி சென்னை அரசினர் தோட்டத்துக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்று பெயர் சூட்டினார் அப்போது முதல்-அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர்.
பொது வாழ்வில் தூய்மைக்கு ஒரு உதாரணமாக விளங்கிய ஓமந்தூர் ராமசாமிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நல்லாட்சிக்கு இலக்கணமாக, பண்பட்ட அரசியலுக்கு வழிகாட்டியாக, பொதுவாழ்க்கையின் உண்மைப் பொருளாக வாழ்ந்து மறைந்த ஓமந்தூராரின் புகழ் ஓங்குக! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.