

சென்னை,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று திமுக இளைஞரணி தலைமையகமாக விளங்கி வருகிறது. இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி. இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.