சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் சிலிண்டர் விலை உயர்வு: மத்திய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறையும் காலங்களில், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் விலையைக் குறைக்க மறுக்கும் அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் மீது திணிக்கிறது.
எஸ்டிபிஐ கட்சி
Published on

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வின்படி, வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 29 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது.

சிலிண்டர் விலை

அதன்படி, கடந்த 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக 89 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை முற்றிலும் சீர்குலைக்கும் செயலாகும். சமீபத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் பெருமளவு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வஞ்சரிக்கும் செயலாகும். சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களின் அடிப்படையில் தான் இந்த விலை உயர்வு என்று அரசு தரப்பில் வழக்கம்போல காரணங்கள் கூறப்படுகின்றன.

மத்திய அரசு

ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறையும் காலங்களில், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் விலையைக் குறைக்க மறுக்கும் அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் மீது திணிக்கிறது.

மக்களுக்கு எவ்வித நன்மையும் தராத இந்த 'விலை நிர்ணயக் கொள்கை' அப்பட்டமான மக்கள் விரோதப் போக்காகும். எனவே, ஏழை மற்றும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com