

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 50 நாட்கள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு நாள் ஊதியமாக ரூ.281 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்குவதற்கான அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.