சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்

கனிம வள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறையானது, கனிமவள ஆய்வினை அறிவியல் பூர்வமான முறையில் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உகந்த வகையில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது குறித்தும், கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிப்பதற்காக, குத்தகைப் பகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்து குத்தகைக்கு விடப்பட்ட பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிப்பதற்காக ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கனிம வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் முறையாக எடுத்துப் பயன்படுத்துவதற்கும், கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், இயற்கை வளங்கள்துறை அமைச்சர் டிகே. பிரபு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, இயற்கை வளங்கள்துறை முதன்மைச் செயலாளர் (மு.கூ.பொ) சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com