பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பல ஆண்டுகளாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போராட்ட பந்தலுக்கு இரவு 12 மணிக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பழைய ஓய்வதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக உறுதி அளித்தார். மேலும் அவரது தேர்தல் வாக்குறுதியாக 2021-ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதாக உறுதி அளித்து இருந்தார்.

இன்று அவைகள் எல்லாம் மறந்து முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கிறார். தொடர்ந்து காலந்தாழ்த்துகிறார். தமிழ்நாடு முதல்-அமைச்சரை இந்த நான்கு ஆண்டுகளில் எட்டு முறை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழக முதல்வர் உடனடியாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இந்த தமிழ் மண்ணில் மீண்டும் அமல்படுத்திட வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில், "வெளி முகமை" (தற்காலிக ஊழியர்) பணியிடங்களை தவிர்த்து நிரந்தர பணியிடங்களை உருவாக்கிட வேண்டும், மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டு அரசு பள்ளிகளில் கிடைக்கின்ற காலி பணியிடங்களை உடனே இந்தக் கல்வி ஆண்டுக்குள் நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com