

புதுடெல்லி,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகளையும் அனுப்பி இருக்கிறது. அவர்களது மேற்பார்வையில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக மாணவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த சிறப்பு குழுவில் தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா, எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை மீட்டு வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, உக்ரைனின் சிமி பகுதியில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களிடம் அவர்களை மீட்பதற்காக சென்ற தூதரக அதிகாரிகள் இந்தியில் பேசுவதாகவும், மீட்பு பணிகளில் பாரபட்சம் காட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அது குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டியதாகவும், உக்ரைனில் இருந்து மீட்கப்படும் தமிழக மாணவர்களிடம் தூதரக அதிகாரிகள் ஆங்கிலத்திலும் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.