

சென்னை,
தமிழகத்தின் மின்தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில், 20,000 மெகாவாட்டை தாண்டும். இந்த ஆண்டு கோடை காலம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால், மின்தேவையும் குறையவில்லை.
பகலில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 6,500 மெகாவாட் கிடைப்பதால், மின் தேவையை ஈடுசெய்ய, மின்வாரியத்திற்கு சிரமம் இல்லை. அதே சமயம், கடந்த மே மாதம் தொடங்கிய காற்றாலை சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. எனவே சூரிய சக்தி மின்சாரம் கிடைக்காத சமயங்களில், காற்றாலை மின் நிலையங்களில் தினமும் 1,000 மெகாவாட் கூட கிடைப்பதில்லை.
இந்நிலையில், மின் தேவையை பூர்த்தி செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக மின்சாரம் வாங்கும் நடவடிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது. கடந்த, 15-ந்தேதி முதல் வரும் 31-ந்தேதி வரை, தினமும் 1,500 மெகாவாட் வாங்க, சில நிறுவனங்களிடம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால், மின் தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் மின் கொள்முதலும் குறைந்துள்ளது. இந்நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் உச்ச நேர மின்தேவையை சமாளிக்க, வரும் நவம்பர் 1-ந்தேதி முதல், 2027 மே 31-ந்தேதி வரை, 7 மாதங்களுக்கு தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோரி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.