தமிழகத்திற்கென ஒரு சிறந்த விளையாட்டு கொள்கை உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்ந்து பயில 495 மாணவ-மாணவியர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவ-மாணவியரின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாணவ- மாணவியருக்கான விளையாட்டு விடுதி ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழகத்தை உருவாக்கிடவும், இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு இலக்கினை எளிதாக அடைந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 27 விளையாட்டு விடுதிகள் மற்றும் 6 முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடத்தப்பட்டு, இக்கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு விடுதி இடங்களுக்கான ஒதுக்கீடு ஆணைகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இக்கலந்தாய்வில் தடகளம், கூடைப்பந்து, வாள்வீச்சு, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கபாடி, நீச்சல், டேக்வோன்டோ, வாலிபால், பளுதூக்குதல், வுஷு ஆகிய விளையாட்டுகளுக்கு விளையாட்டு விடுதி சேர்க்கை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டுவரும் 40 விளையாட்டு விடுதிகளில் கடந்தாண்டு வரை 2,517 மாணவ-மாணவியர்கள் தங்கி பயின்று வந்தனர். தற்பொழுது இன்றைய தினம் நடைபெறும் இக்கலந்தாய்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 344 மாணவர்கள் மற்றும் 151 மாணவியர்கள் என மொத்தம் 495 மாணவர்கள், இந்த கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இக்கலந்தாய்வில் பங்கேற்றுள்ள உங்களை போன்றே நானும் தமிழ் வழி கல்வியில், அரசு பள்ளியில் பயின்று கல்லூரி விளையாட்டு விடுதி மாணவராக விடாமுயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன். கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் நம் முயற்சியின் மூலம் நம்மை சாதனையாளர்களாக மாற்றியமைத்து கொள்ளமுடியும். இனி விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் நீங்கள் வெற்றியாளர்களாக திகழ உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு வீரராக பயிற்சியினை தொடங்கினால் உங்களது உயர்கல்வியின்போது தலைச்சிறந்த கல்லூரிகளும் உங்களுக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கும் நிலை ஏற்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் என்றாலே ஒரு தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்துல்காலம் தெரிவித்ததை போல ஒவ்வொரு மாணவனும் தனக்கான கனவினை அடைந்திட பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் அத்தகைய கனவு ஒரு நாள் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

பொதுப் பணித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தாலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் விளையாட்டுத் துறை தொடர்பான பணிகளுக்கு முதலாவதாக முக்கியத்துவம் அளித்து பணிபுரிவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகத்திற்கென ஒரு சிறந்த 'விளையாட்டு கொள்கை' உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர்ந்துள்ள உங்கள் குழந்தைகள் ஒரு ராணுவ வீரனுக்கு நிகராக மாநிலத்தின் வெற்றிக்காகவும், நம் நாட்டின் வெற்றிக்காகவும் அவர்களை தயார்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு. ரெ.சுமன் மற்றும் பொது மேலாளர் எல்.சுஜாதா மற்றும் அனைத்து மாவட்ட வீரர், வீராங்கனைகள் அவர்தம் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com