கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை: அமைச்சர் சம்பத்குமார் உறுதி

காவல்துறை துரிதமாக செயல்பட்டு இருவரை கைது செய்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை: அமைச்சர் சம்பத்குமார் உறுதி
Published on

கோவை,

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.   இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 இதற்கிடையே சூலூர் அருகே முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரே, இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கார்த்திக் என்ற 33 வயது கொடூரனை போலீசார் கைது செய்த நிலையில், உதவியாக இருந்ததாக மோகன் ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்த தப்ப முயற்சித்த கார்த்திக், காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்களில் ஈடுபட அஞ்சும் வகையில் உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை துரிதமாக செயல்பட்டு இருவரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு நிவாரணம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com