அரசு விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீதாஜீவன்

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
சென்னை,
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காலில் ஆபரேசன் முடிந்துள்ளது. அந்த சிறுமியை நான் பார்த்துவிட்டு வந்தேன். அவரது தாயாரையும் சந்தித்து பேசினேன். அப்போது அவர், யூடிப்பில் ஊர், பெயர் வந்துவிட்டது என்று வேதனையுடன் சொன்னார். எனவே தயவு செய்து பெயர், ஊர், மாவட்டத்தை பதிவு செய்ய வேண்டாம். இது சட்டப்படி குற்றம் ஆகும்.
சம்பவம் நடைபெற்ற சேவை இல்லத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. போலீசில் புகார் அளிக்கப்பட்டு இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அங்குள்ள காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் உத்தரவு ஆகும். எனவே இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு சேவை இல்லத்தில் 3 பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
எனவே தகுதியாக இருக்கும் பெண் காவலர்கள் உடனடியாக அங்கு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். இந்த விடுதியில் 130 பிள்ளைகள் தங்கி படித்து வருகிறார்கள். காலையில் 5.30 மணிக்கு அனைத்து பிள்ளைகளும் படிக்க உட்காருவார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியும் படிக்க வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்த விடுதியின் வார்டன் விடுமுறையில் இருந்துள்ளார். சமையல் செய்பவர் மட்டும் மாணவிகளுடன் தங்கி இருந்துள்ளார்.
அவர் வெளியே சென்ற போது காவலாளி விடுதி உள்ளே வந்துள்ளார். இந்த மாணவி இந்த விடுதிக்கு வந்து 5 நாட்கள்தான் ஆகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எல்லா மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விடுதி அமைந்துள்ள வளாகத்தில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி, ஒருங்கிணைந்த சேவை மையம் இருக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலகமும் உள்ளது. எனவே இந்த விடுதி மிகவும் பாதுகாப்பான இடம் ஆகும். ஆனால் இந்த நிகழ்வு அங்கு பாதுகாப்பில் இருந்த அரசு ஊழியரால் நடைபெற்றிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
எனவே அரசு பெண்கள், குழந்தைகள் இல்லங்களிலும், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிப்பது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சமூக நலத்துறை முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.