

சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் போராட்டங்களை நசுக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் காவல்துறை ஈவு இரக்கமின்றி 13 பேரைச் சுட்டுக் கொன்றது. அதில் 11 பேர் உச்சந்தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று ஆதாரபூர்வமாக செய்தி வந்துள்ளது.
தூத்துக்குடி சுற்றுவட்டார 99 விழுக்காடு மக்கள் ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த ஆலையில் பணியாற்றுவோர் வேலை வாய்ப்புப் போய்விடும் என்றும், இந்தியாவில் தாமிர உற்பத்தி குறைந்துவிடும் என்றும் சில மேதாவிகள் கூறுகின்றனர். ஆலையை மூடும்போது அதில் வேலை பார்த்தவர்களுக்கு உரிய வாழ்வாதாரப் பணத்தை ஆலை வழங்க வேண்டும். பத்து லட்சம் மக்களுடைய உடல்நலமும், சுற்றுவட்டார விவசாயப் பாதுகாப்பும்தான் மிக முக்கியமானதாகும்.
தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டதை உரிய ஆதாரங்களோடு பக்கம் பக்கமாக என்னால் பட்டியலிட முடியும். இப்பொழுதும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குதவற்கு மிகத் தந்திரமாக தமிழக அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயலும். சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை டிசம்பர் 21-ந் தேதி ஆணைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை தற்போது அணுகக்கூடாது. கேவியட் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை அணுகினால் அப்பொழுது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லலாம்.
தமிழக அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தானும் வழக்குத் தொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.