தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே 27-ந் தேதி அன்று உத்தரவிட்டிருந்தார். அவர் சொன்னபடி அதற்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மொத்தம் 18 பேருக்கு 27-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டவர்கள், தங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதி உதவிகளையும், தேவையான நிவாரண உதவிகளையும், மருத்துவ வசதிகளையும் வழங்கியதோடு, குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பு ஆணையும் வழங்கியதற்காக முதல்- அமைச்சருக்கு நன்றி கூறினார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிர் இழந்தவர்களின் 10 வாரிசுதாரர்கள், பலத்த காயமடைந்த 5 பேர், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுகள் என மொத்தம் 19 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆகிய துறைகளில் பணிபுரிய கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பொதுத்துறை துணைச் செயலாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com