

சென்னை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு மே 22ந்தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதன்பின் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மீது நேற்று நடந்த விசாரணையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் தற்போதைய நிலை என்ன? இதே சம்பவத்துக்காக சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையின் நிலை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தெடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இதுவரை 365 சாட்சிகளை விசாரித்துள்ளது என அரசு பதிலளித்து உள்ளது.
இதனை அடுத்து விசாரணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி ஆணைய செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.