சட்டசபையை உலுக்கிய ஸ்டெர்லைட் கூட்டத்தொடர் முடியும் வரை புறக்கணிக்க தி.மு.க. முடிவு

ஸ்டெர்லைட் விவகாரத்தால் சட்டசபையின் முதல்நாள் கூட்டமே அமளியில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்தது.
சட்டசபையை உலுக்கிய ஸ்டெர்லைட் கூட்டத்தொடர் முடியும் வரை புறக்கணிக்க தி.மு.க. முடிவு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான (2018-2019) பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக நேற்று மீண்டும் கூடியது. சட்டசபை கூட்டத்தின் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கேள்வி நேரம் முடிந்ததும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உறுப்பினர்கள் சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம் தொகுதி), தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்), டி.டி.வி.தினகரன் (ஆர்.கே.நகர்) ஆகியோர் கொடுத்த கவன ஈர்ப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் சண்முக நாதன்:- கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அது தொடர்பான விவர அறிக்கையை அவை முன்புவைக்கிறேன்.

உறுப்பினர் சண்முகநாதன்:- முதல்-அமைச்சர் அளித்த விவர அறிக்கையை படித்து பார்த்தேன். திருப்திகரமாக இருந்தது. தூத்துக்குடிக்கு உடனடியாக மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை அனுப்பி, அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெடி வெடித்து முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவ்வாறு எல்லோரும் வாழ்த்தும் போது, எதிர்க்கட்சி தலைவர் உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறார். எந்த உள்நோக்கமும் இல்லை, வெளிநோக்கமும் இல்லை. தொலைநோக்குதான் இருக்கிறது.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி நிலவியது)

உறுப்பினர் தமிமுன் அன்சாரி:- ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக வெளியிடப்பட்ட அரசாணை காலதாமதமாக வெளிவந்துள்ளது. சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினர் டி.டி.வி.தினகரன்:- சமூகவிரோதிகள் ஊடுருவல் என்று காழ்ப்புணர்ச்சியோடு தவறான அறிக்கையை முதல்-அமைச்சர் இங்கே தந்திருக்கிறார். அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகா?. காவல் துறை, உளவுத்துறை என்ன செய்தது?.

(இந்த இடத்தில் தமிழக அரசை குற்றம்சாட்டி டி.டி.வி.தினகரன் பேசியதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)

உறுப்பினர் டி.டி.வி.தினகரன்:- உண்மையை சொன்னால் கோபம் வருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பு. பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது வேண்டாம். சி.பி.ஐ. விசாரணை வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், காவிரி மேலாண்மை வாரிய வழக்கை சுட்டிக்காட்டி தமிழக அரசு வக்கீல்கள் பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் அமைச்சர் பி.தங்கமணி எழுந்து பேசினார்)

அமைச்சர் பி.தங்கமணி:- சமூகவிரோதிகள் என்று குறிப்பிட்டால், இவர்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?. 3 நாட்கள் தூத்துக்குடியில் இருந்ததாக சொல்கிறார்கள். மக்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்த அரசுக்கு ஏதாவது கோரிக்கை வைத்தார்களா?. காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் தமிழக அரசு வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால்தான், தூத்துக்குடி பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 99 நாட்கள் அமைதியாக போராடி வந்திருக்கிறார்கள். ஆனால், 100-வது நாளாக ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி பேரணியாக செல்வோம் என்று முன்கூட்டியே முறையாக அறிவித்துவிட்டு, 22-5-2018 அன்று மக்கள் பேரணி என்ற அந்தப் பேரணியை நடத்தியிருக்கிறார்கள். போதிய எண்ணிக்கையில் போலீசாரை பணியமர்த்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், அன்றைய தினம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

ஆனால், அப்பாவி மக்கள் மீது சீருடையில் இருந்த போலீசாரும், சீருடையில் இல்லாத போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். அந்த துப்பாக்கி சூட்டில் கொடூரமாக 13 பேர் இறந்திருக்கிறார்கள். இதுவரையில் 13 பேர் என்ற கணக்கு முறையாக வந்துகொண்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகள், ஊடகங்கள், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் 25 முதல் 30 பேர் வரை இறந்திருக்கலாம் என்று செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, அந்த துப்பாக்கி சூட்டின்போது, குறிபார்த்து சுடும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், அதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பதை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை.

இன்றைக்குக்கூட முதல்-அமைச்சரின் விவர அறிக்கையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், பொது சொத்துக்கு மேலும் சேதம் விளைவிக்காமல் தடுக்கவும், கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு என்ற வார்த்தையே இந்த அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

தனியார் ஆலைக்காக ஒரு துப்பாக்கி சூட்டை நடத்தி, இப்படியொரு கொடுமையை செய்தது ஏன்?. ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி மாநில உளவுத்துறை கொடுத்த அறிக்கை என்ன?. இதுபற்றி ஒரு வெள்ளை அறிக்கையை இந்த அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இந்த நிலையில், 28-5-2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசு ஆணையை வெளியிட்டு இருக்கிறீர்கள். முறையாக மூடுவதென்றால், அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்திருக்க வேண்டும். இந்த ஆலையை திறக்க மாநில அரசு 1995-ம் ஆண்டு வழங்கிய சுற்றுச்சூழல் அறிக்கையை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். மின்சாரம், தண்ணீர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய லைசென்சுகள், பர்மிட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இவை எதையுமே செய்யாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக வெறும் மொட்டையாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதையொரு கண்துடைப்பாகவே நான் பார்க்கிறேன்.

அமைச்சரவையை கூட்டி, இந்த ஆலையை மூடக்கூடிய கொள்கை முடிவை எடுத்திருந்தால், உள்ளபடியே நான் மனப்பூர்வமாக வரவேற்று இருப்பேன். ஆனால், மூடுவதுபோல மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்ற செய்தியை ஸ்டெர்லைட் ஆலைக்கு சிக்னல் கொடுக்கும் விதத்தில் தான் இந்த அரசாணை அமைந்திருக்கிறது. ஆகவேதான், இதை ஒரு கண்துடைப்பு நாடகம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.

போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிறையில் இருப்பவர்களையும், கணக்கில் காட்டாமல் கைது செய்யப்பட்டு இருப்பவர்களையும் உடனடியாக இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த தவறியதற்கும், துப்பாக்கி சூடு நடத்தியதற்கும் தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கும் வரையில் தி.மு.க. சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், இந்த அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

(இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்) அதன்பிறகு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீண்ட விளக்கம் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பிறகு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். அவர்பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு ஏற்பது?, துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?. மஞ்சள் நிற ஆடை அணிந்தவர்கள் சுட்டார்கள்?. அவர்கள் யார், தீவிரவாதிகளா?. அவர்களை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் நீண்ட விளக்கம் அளித்து முடித்ததும், மீண்டும் கே.ஆர்.ராமசாமி எழுந்து பேசினார். அப்போது, நான் கேட்ட கேள்விக்கு முதல்-அமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றார். அப்போது எழுந்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்குத்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிஷன் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்காமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பின் மீது பேச முக்குலத்தோர் புலிப்படை உறுப்பினர் கருணாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோர் அனுமதி கேட்டனர்.

ஆனால், சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்துவிட்டார். காலையில் தாமதமாக வந்து கவன ஈர்ப்பு கொடுத்ததால், பேச அனுமதி அளிக்க முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். அதை ஏற்க மறுத்து உறுப்பினர்கள் கருணாஸ், முகமது அபுபக்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையின் முதல்நாள் கூட்டமே அமளி மற்றும் வெளிநடப்புடன் முடிவடைந்தது. மேலும் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com