

தேனி,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதுபற்றி தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குரங்கணி காட்டுத்தீ போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீயில் சிக்கி 17 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேருக்கு எந்த காயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.