தமிழகத்தில் நடக்கும் பொய்க்கால் குதிரை ஆட்சி சில காலம்தான்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் பொய்க்கால் குதிரை ஆட்சி சில காலம்தான்: எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'காய்த்த மரம்தான் கல்லடி படும்' அப்படித்தான் எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அதிமுக என்னும் கம்பீரமான ஆலமரத்தின் நுனிக் கிளையில் சிலர் அமர்ந்துகொண்டு அடி மரத்தையே வெட்டி சாய்க்கப் பார்க்கிறார்கள். அவர்கள்தான் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்களே தவிர, ஆலமரத்திற்கு எந்தத் தீங்கும் வராது.தேர்தலில் வெற்றியும். தோல்வியும் சகஜம்.எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இதுபோன்ற தேர்தல் பின்னடைவுகளை சந்தித்து,மீண்டு வந்தவர்கள்தான். அதிகாரம் இருந்தால் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என்ற நிலையில் நம் இயக்கத்தின் கோடான கோடி தொண்டர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், இந்த இயக்கத்தை அழிக்க எதிரிகள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் தொண்டர்களின் உறுதுணையோடு முறியடித்து, ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடத்தினோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெல்லவில்லை என்பது உண்மை. அதேநேரம், நாம் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழக்கவுமில்லை. நாம் 21.21 சதவீத வாக்குகள் அதாவது தனித்து 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகளும், கூட்டணியோடு சேர்ந்து சுமார் 1 கோடியே 34 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் 47 சட்டமன்றத் தொகுதிகளும், கூட்டணி கட்சிகள் 6 தொகுதிகளும் என, மொத்தம் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

மக்கள் விருப்பத்தையும், நமது பின்னடைவையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், இந்த தோல்வியைக் கண்டு நாம் கொஞ்சமும் துவளவில்லை. ஏனென்றால், இது நிரந்தரமில்லை.

பதவி இல்லாமலும், மக்களுக்காகப் போராடும் இயக்கம் இது.

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இயக்கம் இது.

தோல்விகளை வெற்றியாக்கி, ஆட்சியைப் பிடிக்கும் இயக்கம் இது-

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் எந்தஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவையும், பெரும்பான்மையையும் கொடுக்கவில்லை. எனவே, தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம்

அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துவிட்டது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. இப்போதும் நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அரசியலில் அவ்வப்போது சில புயல்கள் வந்துபோகும். அந்தப் புயல்களையெல்லாம் தாங்கியும், தாண்டியும் நிற்கும் ஆயிரம் காலத்து பயிர் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். கழக நிறுவனர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா காலம் முதல் இன்றுவரை இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் தெரியும். அவர்களின் வழிகாட்டுதல்படியே இன்றும் நாம் செயலாற்றி வருகிறோம்.

நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். அதிமுக செழித்து வளரும். ஜெயலலிதாவின் ஆட்சி விரைவில் அமையும்.ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது.விட்டில் பூச்சியாக வீழ்ந்து விடாதீர்கள். அனைவரும் ஒன்று கூடுவோம். மக்கள் எதிர்பார்க்கும் அமைதி, வளம், வளர்ச்சி' ஆட்சியை அமைப்போம். நாளை நமதே! இந்த நாடும் நமதே” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com