மகளிர் கல்லூரியில் மின்விசிறிகள், புத்தகங்கள் திருட்டு - 6 பேர் கைது

சென்னை பிராட்வே சாலையில் மகளிர் கல்லூரியில் மின்விசிறிகள், புத்தகங்கள் திருடி சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகளிர் கல்லூரியில் மின்விசிறிகள், புத்தகங்கள் திருட்டு - 6 பேர் கைது
Published on

சென்னை பிராட்வே சாலையில் உள்ள பாரதி அரசு மகளிர் கலை கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு திடீரென ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி வளாகத்தில் பல்வேறு பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் விசாரித்தபோது கொரோனா ஊரடங்கின்போது கல்லூரி மூடப்பட்டு இருந்த நேரத்தில் கல்லூரிக்கு சொந்தமான 85-க்கும் மேற்பட்ட மின்விசிறிகள், மோட்டார் பம்புகள், பீரோவில் இருந்த விலை உயர்ந்த புத்தகங்கள் திருட்டுபோய் இருப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அப்போது அதே பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் பாரதி அரசு மகளிர் கல்லூரி என முத்திரையிடப்பட்ட புத்தகங்கள் இருந்ததை கண்டு பழைய பேப்பர் கடைக்காரரிடம் போலீசார் விசாரித்தனர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 36), வீரமணி (42), தீபன் (38), வெங்கடேஷ் (43), பாபு (38), சூரி (41) ஆகியோர்தான் கொண்டு வந்து கொடுத்து பணம் வாங்கி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து கல்லூரியில் திருடிய 6 பேரையும் கைது செய்து சிறயில் அடைத்த போலீசார், அவர்களிடமிருந்து புத்தகங்கள், 20 மின்விசிறிகள், 3 மோட்டார் பம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள வடிவேல், கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். திருட்டு பொருட்கள் வாங்கிய பாஸ்கர் மற்றும் ராமநாதன் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com