

மது தர மறுப்பு
திருச்சி பொன்மலை மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவில் வசித்து வருபவர் சரண் என்ற அற்புதராஜ்(வயது 22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான ஸ்டீபன் என்பவருக்கு குழந்தை பிறந்ததை கொண்டாடும் விதமாக மலையடிவாரம் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் அமர்ந்து நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்ற கோப்பு ராஜா(27) என்பவர், சரண் மற்றும் அவரது நண்பர்களிடம் தனக்கு குடிப்பதற்கு மது வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு மது தர அவர்கள் மறுத்தனர்.
அரிவாள் வெட்டு
இதனால் ஆத்திரமடைந்த கோப்பு ராஜா கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்களை வெட்டியுள்ளார். இதில் சரணுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சரணின் நண்பர்கள் கோப்பு ராஜாவை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் கோப்பு ராஜாவும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசில் சரண் அளித்த புகாரின்பேரில், கோப்பு ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் கோப்பு ராஜா அளித்த புகாரின்பேரில் குண்டூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(20), அதே பகுதியை சேர்ந்த விஜய்(27), மலையடிவாரம் பகுதியை சேர்ந்த நவீன்(24), ஸ்டீபன்(24), எடிசன்(21) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோப்பு ராஜா மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் மட்டும் 7 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.