திருவள்ளூர் அருகே தேன்கூட்டில் கல்வீச்சு; கிராம மக்கள் சிதறி ஓட்டம்: 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவள்ளூர் அருகே சிறுவர்கள் தேன்கூட்டில் கல்வீசியதால் கிராம மக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் அருகே தேன்கூட்டில் கல்வீச்சு; கிராம மக்கள் சிதறி ஓட்டம்: 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மரத்தில் பெரிய தேன் கூடு இருப்பதைக் கண்டனர். இதையடுத்து தேன்கூட்டை எடுத்து தேனை ருசிபார்க்கும் ஆசையில் கீழே இருந்த கல்லை எடுத்து தேன்கூட்டை நோக்கி எறிந்துள்ளனர். அப்போது தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கிராமம் முழுவதும் சுற்றி பறந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் பீதியடைந்ததுடன் தங்களை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினர்.

இந்த நிலையில், கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் (வயது 46), ராதா (65), தேவகுமார் (65), சூர்யா (40), அன்னை மரியா (57) உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கடுமையாக கொட்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதால் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தேனீக்கள் கூட்டை அப்புறப்படுத்தினர். இதனால் கிராமமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம மக்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த நிலையில், வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com