தண்டவாளத்தில் கிடந்த கற்கள்: ரெயிலை கவிழ்க்க சதியா? - சென்னையில் பரபரப்பு

அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், மும்பை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் - சென்னை இடையே தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சென்ட்ரல் நோக்கி சென்ற அதிவிரைவு ரெயில் சிக்னல் வேலை செய்யாததால் திருமுல்லைவாயலில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிக்னல் வேலை செய்யாதது குறித்து, சம்பந்தப்பட்ட இடத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ரெயில் பாதையை மாற்றும் தண்டவாளங்களின் குறுக்கே அதிகளவில் கற்கள் கிடந்தது.
இதைப் பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தண்டவாளங்களுக்கு இடையே கிடந்த கற்களை அவர்கள் அகற்றினர். தொடர்ந்து ரெயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் ரெயில்வே அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.