கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகள் பேசுவதை நிறுத்துங்கள்: கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; அவரோடு போட்டியிட வேண்டாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகள் பேசுவதை நிறுத்துங்கள்: கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
Published on

சென்னை,

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கச்சத்தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது மத்தியில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு' எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2024-ம் ஆண்டில் 528 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 53 மீனவர்கள் கைதானார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியும் , திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மத்திய பாஜக அரசு.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கச்சத்தீவு பற்றி ஒரு ஆர்.டி.ஐ. ஆவணம் வெளியாகி உள்ளதாகச் சொல்லி புரளியைக் கிளப்பி குறளி வித்தை காட்டினார் அண்ணாமலை. அதனைப் பிரதமர் மோடி முதல் வெளியுறவுத்துறை மந்திரி வரை உண்மையாக்க முயன்றார்கள். கச்சத்தீவு பற்றிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனாலும் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோற்றுப்போனது.

புஸ்வாணம் ஆன விவகாரத்தை இப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தூக்கிக்கொண்டு வந்து கலர் மத்தாப்பு காட்ட முயல்கிறார். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியா முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது. தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. எங்கே இந்திய முழுமைக்கும் அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் அதனைத் திசை திருப்ப மத்திய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத்தீவைக் கையில் எடுத்திருக்கிறார் கவர்னர்.

1974-ல் போன கச்சத் தீவைப் பற்றி கவலைப்பட்ட பிரதமர் மோடி அவர் கண் முன்னே இந்தியாவின் 2000 சதுர கி.மீ பகுதிகள் சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில், 'அறிவியல் பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி கச்சத்தீவைக் கண்டிப்பாக மோடி அரசு மீட்கும்" என்று சொன்னவர்கள் எங்கே போனார்கள்? தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத் தீவு கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கச்சத் தீவை மீண்டும் கிளப்புகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி கவர்னருக்கு நினைவு இருக்கிறதா? அப்படியான பதிலடியைத் தொகுதி மறுசீரமைப்பிலும் கிடைக்கும். கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் கவர்னரே! இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய உங்கள் எஜமானர் மோடியிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். கவர்னர் அவரோடு போட்டியிட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com