புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது: வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவாகி இருக்கும் புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது. வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது: வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுகிறது. இது தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும், இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

ஆந்திரா நோக்கி புயல் சென்றாலும், வட தமிழக கடலோர பகுதிகள் வழியாக அது கடந்து செல்வதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,090 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது.

மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இது நகர்ந்து வருகிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று அதிகாலையில்) புயலாக வலுவடைகிறது. இந்த புயல் ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17-ந் தேதி (நாளை மறுநாள்) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடதமிழக கடலோரங்களில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் 15 (இன்று), 16 (நாளை) ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழையும், ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

15, 16-ந் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தரைக்காற்றை பொறுத்தவரையில், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும்.

புயலானது தற்போது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதுவே மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பெரிய மாற்றம். தற்போது உருவாகும் இந்த புயல், கஜா புயலை விட சற்று அழுத்தம் அதிகமாக இருப்பதாகவே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com