புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் அரசியல் செய்வதா? வைகோ மீது தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் அரசியல் செய்வதா? என வைகோ மீது தமிழசை சவுந்தரராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் அரசியல் செய்வதா? வைகோ மீது தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்றும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டுமே தவிர அந்த மக்களை துன்பப்படுத்தும் அளவுக்கு அரசியல் செய்யக்கூடாது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பரிதவித்து கொண்டிருக்கும் மக்களிடம் அன்பாக, ஆதரவாக பேசாமல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். தயவு செய்து இவர்கள் எல்லாம் உதவி செய்ய வேண்டுமே தவிர இதே போல அரசியல் செய்யக்கூடாது.

தமிழக அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர் வைகோ. மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்குத்தான் மத்திய நீர்வள மேலாண்மை வாரியம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது முதல் கட்டம் தான். அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அனுமதி கொடுப்பதற்கு தமிழக பா.ஜ.க.வும் ஒத்துக்கொள்ளாது.

தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பார்களா? சேர்க்க மாட்டார்களா? என்ற பதற்றத்தில் வைகோவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் இருக்கின்றனர். 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்தால் மக்களுக்கான நிவாரண பணியை முழுமையாக செய்ய முடியாது. தேர்தலா? மக்களுக்கான தேறுதலா? என்று பார்த்தால் மக்களுக்கான தேறுதல் தான் அதிகமாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 தமிழர்களையும் விடுவிக்க தி.மு.க. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com