புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: தென் மாவட்டங்களுக்கு 9 பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்தது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 4 தென் மாவட்டங்களுக்கு 9 பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: தென் மாவட்டங்களுக்கு 9 பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்தது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்
Published on

சென்னை,

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மீனவர்கள் தொலைதொடர்பு சாதனங்களை முறையாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி குமரி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 156 எந்திர படகுகள் தற்போது கடலில் உள்ளன. கர்நாடக கடற்கரை எல்லையில் 24 படகுகளும், லட்சத்தீவு கடற்பரப்பில் 35 படகுகளும், கோவா கடற்பரப்பில் 25 படகுகளும், கொல்லம் கடற்பரப்பில் 35 படகுகளும், ரத்னகிரி கடற்பரப்பில் 18 படகுகளும், மங்களூரு கடற்பரப்பில் 9 படகுகளும், மும்பை கடற்பரப்பில் 10 படகுகளும் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 எந்திர படகுகள் கடலில் உள்ளன. அவை தற்போது தரவைக்குளம் கடற்பரப்பில் உள்ளன. மேற்படி 166 படகுகளும் வி.எச்.எப். மற்றும் செயற்கைகோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 96 படகுகளில் உள்ள மீனவர்கள் செயற்கைகோள் தொலைபேசி வைத்துள்ளனர். தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்கும்படி கர்நாடகம், கேரளா, கோவா மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச மீன்வளத்துறைகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க உதவிடும் பொருட்டு அதிகாரிகள் குழு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்கள் மீன்பிடிக்கக்கூடிய பகுதிகளின் புவியியல் குறியீடு ஆகிய விவரங்களை கப்பல்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீனவர்களை அடையாளம் கண்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் குமரி மாவட்டத்துக்கும், நெல்லை மாவட்டத்துக்கு 3 குழுக்களும், மதுரை மாவட்டத்துக்கு 2 குழுக்களும், தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2 குழுக்களும் என மொத்தம் 9 குழுக்கள் தென் மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com