கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் புயல் உருவாக கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on: 

சென்னை,

சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வானிலை மையம்

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “நேற்று (30-10-26) தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (31-10-26) காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Depression), அதன் பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் 02-11-2026 ம் தேதி மாலை வேளையில் நகரக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புயல் எச்சரிக்கை கூண்டு

இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாக கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதால், 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஒன்றாம் எண் புயல்

பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள்.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள் ஆகும்.

X