சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி: திருச்செந்தூரில் பக்தர்கள் சாலை மறியல்

சூரசம்ஹாரம் என்பதால் லட்சகணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி: திருச்செந்தூரில் பக்தர்கள் சாலை மறியல்
Published on: 

முருகப்பெருமானின் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்செந்தூரில் முருகக்க டவுள் சுப்பிரமணிய சுவாமியாக அருள் பாலிக்கிறார்.சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் காலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநா தர், வள்ளி- தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண் டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதம் தொடங்கினர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் பலரும் திருச் செந்தூர் கோவிலில் தங்கி விரதம் இருந்து வந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை காண நெல்லை, தென்காசி, மதுரை, ராமநாதபுரம் என தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

சிறப்பு பஸ்கள்

சூரசம்ஹாரம் என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தற்காலிக பேருந்து நிலையங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. காலை முதலே பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. நடைமேடை முழுவதும் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டனர். இந்நிலையில் சூரசம்ஹாரம் முடிந்து பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்று இரவு கிளம்பினர்.

சிறிது நேரம் பரபரப்பு

ஆனால் பஸ்கள் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து பஸ்கள் வராததால் பக்தர்கள் அவதியடைந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பக்தர்கள் சொந்த ஊர் போக போதிய பஸ்கள் இல்லை என குற்றஞ்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேருந்துகள் வரவைக்கப்பட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

X