

சென்னை,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
வளைகுடா நாடுகளில் மிகப்பெரியதான சவுதி அரேபியாவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் அங்கு கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
கத்தார் நாட்டிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குவைத் நாட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவது தமிழர்கள் தான்.
அவர்களை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வர வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே, வளைகுடா நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தேவையான சிறப்பு விமானங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.