கடலூரில் வினோதம் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வளர்த்தவர் ஒட்டிய சுவரொட்டி வைரலாகிறது

கடலூரில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று, அதனை வளர்த்தவர் ஒட்டிய சுவரொட்டி வைரலாகிறது.
கடலூரில் வினோதம் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வளர்த்தவர் ஒட்டிய சுவரொட்டி வைரலாகிறது
Published on

செல்ல பிராணி வளர்ப்பு என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அலாதி பிரியம். இதனால் வீடுகளில் நாய், பறவைகள், பூனை போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். செல்ல பிராணிகளை வளர்ப்பது உடல், மனம், சமூக நலன் சார்ந்ததாக இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளிடம் செல்பேன்களை கையில் கொடுத்து, அனுப்புவதை காட்டிலும், செல்ல பிராணிகளை கையில் கொடுத்தால் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள். அந்த அளவுக்கு அதன் மீது பாசத்தை காட்டுவார்கள். அதற்கு தேவையான உணவு வகைகளை வாங்கிகொடுத்து, அது உண்ணும் போது பார்த்து மகிழ்வார்கள்.

பூனையை காணவில்லை

எங்கு சென்றாலும், செல்ல பிராணிகளை உடன் அழைத்து செல்வது, தூங்கும் போது, அதையும் தங்களுடன் தூங்க வைப்பது, சிலர் குளிர்சாதன வசதியுடன் பராமரிப்பது என்று அதற்கென தனியாக நேரத்தையும் செலவிடுவார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளும் செல்ல பிராணிகளை தங்கள் குழந்தையாக பாவித்து வளர்த்து வருகிறார்கள்.

சிலர் அதை வியாபார நோக்கில் வளர்த்து, விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டுகிறார்கள். இருப்பினும் தான் வளர்க்கும் செல்ல பிராணிகளை காணவில்லை என்றால், அதை தேடி அலைவதையும் நாம் பார்த்து இருக்கிறேம். ஆனால் தான் செல்லமாக வளர்த்த பூனையை காணவில்லை என்று சுவரொட்டி ஒட்டி தேடுவதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இந்த வினோத சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மாநகர பகுதிகளில் நேற்று காலையில் ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் வேடிக்கையாக பார்த்து சென்றனர்.

ரூ.10 ஆயிரம் சன்மானம்

அந்த சுவரொட்டியில், வெள்ளை நிற ஆண் பூனை, தலை மற்றும் வால் பகுதியில் சந்தன நிறம் இருக்கும். பூனை பெயர் ஜோஷி, வயது 3. ஒரு மாதத்திற்கு மேல் காணவில்லை. வழி மாறி யார் வீட்டிலாவது தங்கி இருக்கலாம். 4 திசைகளிலும் தேடி உதவவும். ஜோஷி என்று கூப்பிட்டால் உங்களை பார்க்கும். அடையாளம் சரியாக பார்த்து போட்டோ அல்லது வீடியே எடுத்து அனுப்புங்கள் என்று குறிப்பிட்ட முகவரி, செல்போன் எண், பூனை படம் ஆகியவற்றையும் சேர்த்து ஒட்டி உள்ளனர்.

இந்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வினோத சுவரெட்டியை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீட்டில் உள்ளவர்களை காணவில்லை என்றால் அவரை தேடி சுவரொட்டி ஒட்டும் காலம் மாறி, தற்போது செல்ல பிராணிகளை சுவரொட்டி ஒட்டி தேடும் சம்பவம் கடலூரில் வினோதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com