நடந்து சென்ற சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்.. அதிர்ச்சி சம்பவம்

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தெருநாய்களை விரட்டினர்.
நடந்து சென்ற சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்.. அதிர்ச்சி சம்பவம்
Published on

தென்காசி,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனையும், பூங்காவில் விளையாடிய சிறுமியையும் நாய்கள் கடித்து குதறிய சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோன்ற சம்பவம் தென்காசி மாவட்டத்திலும் அரங்கேறி துயரத்தை ஏற்படுத்தியது.

கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் 12-வது வார்டு மேல தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ், கூலி தொழிலாளி. இவருடைய மகள் மனிஷா (வயது 8), அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நேற்று காலையில் மனிஷா தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு நடந்து சென்றாள். அங்குள்ள காலிமனையில் குப்பைகள் குவிந்து கிடந்ததால், 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிந்தன. அந்த வழியாக சென்ற சிறுமி மனிஷா மீது திடீரென்று தெருநாய்கள் பாய்ந்து கடித்து குதறின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தெருநாய்களை விரட்டினர்.

தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சிறுமி மனிஷாவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடையநல்லூர் அருகே சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. எனவே, அந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com