மழையால் சேதமடைந்த ஓடைப்பாலம்

மழையால் ஓடைப்பாலம் சேதமடைந்தது.
மழையால் சேதமடைந்த ஓடைப்பாலம்
Published on

அணுகு சாலை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி-சாத்தம்பாடிக்கு இடைப்பட்ட பகுதியில் தரைப்பாலம் இருந்தது. அந்த பாலத்தை அகற்றி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் தரைப்பாலம் அகற்றப்பட்டு, தற்போது மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் தற்காலிகமாக அதன் அருகில் அணுகு சாலை அமைக்கப்பட்டது.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக முத்துவாஞ்சேரி-சாத்தம்பாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வந்த காட்டாற்று நீரானது, அந்த பகுதியில் உள்ள சின்ன ஏரியை நிரப்பி, மீண்டும் அங்கிருந்து காட்டாற்று ஓடை வழியாக சென்று பொன்னாற்றில் கலக்கிறது.

இந்த காட்டாற்று ஓடை தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. ஆனால் அதிக நீர்வரத்து காரணமாக அருகில் அமைக்கப்பட்டிருந்த அணுகு சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக மாணவ, மாணவிகள், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

இந்த சாலை வழியாக அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரமங்கலம், முத்துவாஞ்சேரி, காரைக்குறிச்சி வழியாக கும்பகோணத்திற்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீபுரந்தான், முத்துவாஞ்சேரி, வழியாக விக்கிரமங்கலம் வரை பஸ்கள் இயக்கப் படுகின்றன. ஆனால் இந்த பாலம் சேதமடைந்ததால் பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர், அந்த சாலையின் மீது மீண்டும் மண்ணைக் கொட்டி வாகனம் சென்று வரும் வகையில் சாலையை அமைத்து கொடுத்தனர். இதனால் மீண்டும் நேற்று மாலை அந்த வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com