பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை - தொழிற்சாலை பாதுகாப்பு துறை எச்சரிக்கை

குழந்தைகளை பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட அபாயம் நிறைந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தின் நிர்வாக எல்லைக்குள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளன. இதற்கிடையே, தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி குழந்தைகள் தொழிற்சாலை பணிகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு துறையின் எல்லைக்குள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் 14 வயது பூர்த்தியடையாத குழந்தைகளை வேலைக்கு வைக்க கூடாது. அத்துடன் தொழிற்சாலைகளில் வேலை செய்ய அனுமதிக்கவும் கூடாது. 18 வயதுக்கு குறைவான வளரிளம் குழந்தைகளை பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட அபாயம் நிறைந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது.

அவ்வாறு ஈடுபடுத்துவது, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை மற்றும் முறைபடுத்துதல் சட்டம்) 1986 (திருத்திய சட்டம்-2016)-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பள்ளிக்குழந்தைகளை, வளரிளம் பருவத்தினரை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். மேலும், துறை அதிகாரிகள் ஆய்வின்போது, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியில் இருப்பது தெரியவந்தால், தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். அத்துடன் கோர்ட்டு நடவடிக்கை மூலம் 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com