நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய இன்ஸ்பெக்டர், நீதிபதி மீது கடும் நடவடிக்கை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

உயிரோடு இருப்பவரை கொலை செய்யப்பட்டதாக கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட கீழ்கோர்ட்டு நீதிபதி ஆகியோர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய இன்ஸ்பெக்டர், நீதிபதி மீது கடும் நடவடிக்கை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் நந்த கிஷோர் சந்தக். இவரை கடந்த 2017-ம் ஆண்டு மர்ம கும்பல் போனில் மிரட்டியது. பின்னர் அவரை அந்த கும்பல் தாக்கியது. மற்றொரு நாள், அதே கும்பல் வீடு புகுந்தும் அவரை தாக்கியது. இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் நந்த கிஷோர் சந்தக் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், நந்த கிஷோர் சந்தக்கின் நெருங்கிய உறவினர்கள் ராதேஷ் ஷியாம் சந்தக், சுரேந்திரகுமார் சந்தக் ஆகியோர் தூண்டுதலின் பேரில், மணலி வெங்கடேஷ், புளியந்தோப்பு சதீஷ், தண்டையார்பேட்டை மோகன், ராயபுரம் அர்ஜூன் ஆகியோர்தான் நந்த கிஷோர் சந்தக்கை தாக்கியது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சமரசம் மனு

பின்னர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், கொலை முயற்சிக்கு என்பதற்கு பதில் கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு சென்னை 21-வது மாவட்ட செசன்சு கோர்ட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருதரப்பினரும் சமரசமாக செல்வதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராதேஷ் ஷியாம் சந்தக் உள்பட அனைவரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கொலையா?

மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரனேஷ் ஆஜராகி, குற்றம் சாட்டப்பட்ட ராதேஷ் ஷியாம் சந்தக், புகார்தாரரின் சித்தப்பா தான். குடும்ப பிரச்சினையில் நடந்த இந்த சம்பவத்தில் சமரசமாக போக விரும்புகின்றனர். இருதரப்பினரும் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர்'' என்று வாதிட்டார். ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, 'குற்றப்பத்திரிகையில் கொலை குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை வழக்கில் எப்படி சமரசமாக போக முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு வக்கீல், கொலையே நடக்கவில்லை. போலீசார் அப்படி குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர். கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீஸ் கூறியுள்ள நபரே கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்' என்றார்.

கால் இருக்கிறதா?

இதனால் கோர்ட்டு அறையில் சிரிப்பலை எழுந்தது. ''கோர்ட்டில் ஆஜராகி இருப்பவரை பார்க்கவே பயமாக இருக்கிறது. அவருக்கு கால்கள் இருக்கிறதா?'' என்று கிண்டலாக கேள்வி எழுப்பிய நீதிபதி, பின்னர் புகார்தாரரிடம் விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, இருதரப்பும் சமரசமாக போவதை ஏற்றுக்கொண்டு, அவர்கள் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.

கேலிகூத்து

அப்போது,'வழக்கில் என்ன குற்றத்துக்காக, என்ன சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம் என்றுகூட தெரியாமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். அந்த குற்றப்பத்திரிகையை நீதிபதியும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். இதுவெல்லாம் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இதை இப்படியே விட்டுவிட முடியாது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, நீதிபதி ஆகியோர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்' என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com