ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மே 10ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் இயங்கும் என்றும், மருந்துக் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவித்தது. மேலும் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறதா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில் இன்று நடைபெற்று வரும் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தளர்வுகளைப் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்க படலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com