சமூக வலைதளங்களில் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி கலெக்டர் இளம்பகவத் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமூக வலைதளங்களில் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற ‘வாக்காளர் திருவிழா’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அழைப்பிதழ்களை வழங்கியதோடு, பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் தெரிவித்ததாவது:

தேர்தல் நாளன்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை மறக்காமல் ஆற்ற வேண்டும். இதற்காக அத்தியாவசியப் பணியாளர்கள் பிரிவின் கீழ் படிவம் 12டி (Form 12D) மூலம் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வாக்களிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.45.98 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவை விடுவிக்கப்படும். வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ.5.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.79 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்பனை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல், குற்றத்தைத் தூண்டும் பதிவுகள் அல்லது தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும், ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களும் (Editorial Boards) சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.

நாளை (28.3.2026) அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜேந்திரகுமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com