கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு - மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு - மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் 33 கால்வாய்கள் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. இந்த கால்வாய்களில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை முழுமையாக அகற்றிய சில மணி நேரத்திலேயே பொதுமக்கள் மீண்டும் குப்பை கொட்டிவிடுகிறார்கள். இதனால் மழை பெய்யும்போது தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதை தடுக்க 750 கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதியில் பொருத்தியுள்ளோம்.

இந்த நேரத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சுரங்கப்பாதைகளின் அருகே 144 தண்ணீர் வெளியேற்றும் பம்புகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். கால்வாய்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு வரவேண்டும். மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்கிறோம்.

கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளோம். இதேபோல, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதமும் விதித்து வருகிறோம். சாலைகள் போடும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். உட்புற சாலைகளை தனிக்கவனம் செலுத்தி பராமரிக்கவும், புதிய சாலைகள் போடவும் அறிவுறுத்தியுள்ளோம்.

கடந்த முறை தண்ணீர் தேங்கிய இடங்களை அடையாளம் கண்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். சென்னை மாநகராட்சியின் கீழ் 420 பள்ளிகள் உள்ளது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். விழிம்பு நிலை மாணவர்கள் மாநகராட்சி பள்ளியில் விரும்பி சேர்கிறார்கள். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டிய பள்ளிகளை கணக்கெடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com