வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது தமிழக அரசு பதில் மனு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செயப்பட்டது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது தமிழக அரசு பதில் மனு
Published on

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூட மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியை தவிர்த்து மற்ற பணிகளை மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது, ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவை ஏன் அமல் படுத்தக்கூடாது என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டு அது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு ஆசிரியர்கள் பணி சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பியதன் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை மேற்கொள்ளாமல் மற்ற பணிகளை மேற்கொண்டு வந்த ஆசிரியர்கள் முறையாக தங்களது பணியை மேற்கொள்வது தெரியவந்துள்ளது.

அரசு பள்ளியில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. தவறு செய்யும் ஆசிரியர்களுக்கே இந்த கோர்ட்டு பல கேள்விகளை எழுப்பி உள்ளது என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், நீட் தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி, அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், இது போன்ற ஒரு நிலையை பார்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் கூறினார்.

ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வரும் காலத்தில் எந்த காரணத்திற்காகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாத படி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாகவும், கோர்ட்டு உத்தரவை விமர்சிக்கும் ஆசிரியர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி ஆசிரியர்கள் போராட்டம் சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளிக்கு மாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார் .

இதை தொடர்ந்து நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் கூறி இருப்பதாவது:-

ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக 43,508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. போராட்ட காலத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது.

அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் வேலை பாதிக்கப்பட்டால் மாற்று ஊழியர்கள் கொண்டு பணிகள் நிரப்பப்படும். ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com