வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க கோரி கூடலூரில் நாளை வேலைநிறுத்தம்

கோப்புப்படம்
நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேர முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் சட்டமன்ற தொகுதி வணிகர் சங்க கூட்டமைப்பு அவசர கூட்டம் கூடலூரில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. வணிகர் சங்க நிர்வாகிகள் அப்துல் ரசாக், சம்பத், பாதுஷா, முகமது ஷபி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள வனவிலங்கு பிரச்சினை, மாநில, மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் அவல நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் பந்தலூர் நகர பகுதியில் சாலையில் இருமருங்கிலும் நடைபாதயுடன் கூடிய சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டியும், மனித - விலங்கு மோதலை தடுக்க கூடலூர், பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் வராமல் இருக்க அகழிகள் அமைக்கவும் அதேபோல் மின்வேலி அமைத்து தரக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (11.09.2025) வியாழக்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேர முழு கடை அடைப்பு போராட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி வணிகர்கள் சங்கத்தின் சார்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்தந்த பகுதியில் உள்ள ஆட்டோ, ஜீப், டாக்ஸி, லாரி ஓட்டுனர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் என அனைவரின் முழு ஒத்துழைப்புடன் 24 மணிநேர முழுவேலை நிறுத்தம் நடைபெறும். இவ்வாறு சட்டமன்ற தொகுதி கூட்டமைப்பு தலைவர் அப்துல் ரசாக் தெரிவித்தார்.






