'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்' - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்' - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது .

இந்த நிலையில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

முறையாக ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியே வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையின் உத்தரவு எந்த வகையிலும் வேலை நிறுத்தத்தை பாதிக்காது. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படக்கூடாது என கருதும் அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சினைகளை பேசி தீர்க்க முன்வரவேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை  எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com