

சென்னை,
கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி வதந்தி பரப்பிய திருச்சி மாணிக்கம், கரூர் பெரியசாமி, திருப்பூர் வெங்கடாசலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சைபர் க்ரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. ஆனால் தமிழக அரசு இதுபோல எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த தகவலை உண்மை என்று நம்பிய பலரும் மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி நேற்றிரவு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் கொரோனா குறித்து வதந்தி கிளப்புபவர்கள், தவறான தகவலை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. திரிபாதி எச்சரித்து உள்ளார்.