சமூக நீதிக்காக போராடுவது தமிழ்நாட்டிலும், தமிழ் சினிமாவிலும்தான் - இயக்குநர் வெற்றிமாறன்

சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான் என்று மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றி மாறன் பேசினார்.
சமூக நீதிக்காக போராடுவது தமிழ்நாட்டிலும், தமிழ் சினிமாவிலும்தான் - இயக்குநர் வெற்றிமாறன்
Published on

சென்னை,

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "சமூக நீதியை பேசுகிற படங்களை எடுத்து, சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான். மாமன்னன் என்கிற தலைப்பின் கதாப்பாத்திரத்தை வடிவேலு நடித்திருக்கிறார். நாம் எல்லோரும் அவருடைய காமெடியை ரசித்திருப்போம். அவரை இப்போது சீரியஸான நடிப்பில் பார்க்கப்போகிறோம். வடிவேலுவின் நிலப்பரப்பை மையப்படுத்திய வசனங்களால் ஒரு ஊரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். சமூக நீதியை சினிமாவை பேசியதால் தான் நீதி கிடைக்கிறது" என்று அவர் கூறினார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "இரண்டு படத்துலேயே இருபது படத்துக்கானப் பேர வாங்கியிருக்கார் மாரி செல்வராஜ். எல்லாமே கேளிக்கை படம் இல்ல. வாழ்வின் வலியை உணர்ந்து எடுத்த படம். அவனுக்கு என் பாராட்டுகள். இளையராஜாவுக்குப் பிறகு ஜீனியஸ் ரகுமான் சார். அவர் ரொம்ப நாள் நல்லா வாழணும். நாகேஷ் சாருக்குப் பிறகு, உடல்மொழியில் மதுரை பார்மை கொண்டு வந்து உலகெங்கும் சேர்த்தவர் வடிவேல் சார் தான்.

உதய், நீங்க நல்லா வேலை பாருங்க. 40 நாள் ஷூட்டிங் போற மாதிரி ஒரு படம் பண்ணுங்க, `மாமன்னன்' மாதிரி படம் பண்ணுங்க `சைக்கோ' மாதிரி பண்ணாதீங்க!. உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன். வெகு சீக்கிரத்தில் நம்மை எல்லாம் பார்த்துக்கொள்ளப் போகிறார் உதய். நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். 

விழாவில் பேசிய நடிகர் சிவ கார்த்திகேயன், "ரகுமான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சார். இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு... எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல ..ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான். பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். அதை தொடங்கி வைத்தது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது" என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏஆர் ரகுமான், வடிவேலு, சிவ கார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com